Sunday, January 13, 2013

பெரிய சோம்பேறி யார்???


முன்னொரு காலத்தில் ஒரு நாட்டை வேடிக்கையான அரசன் ஒருவன் ஆண்டு வந்தான். மற்றவர்கள் என்ன செய்கிறார்களோ அதற்கு எதிராக செய்வதே அவன் வழக்கமாக இருந்தது.

மற்றவர்கள் தாடையில் தாடி வைத்திருப்பதைப் பார்த்தான் அவன். உடனே அவன் தன் புருவத்தில் தாடி வளர்க்கத் தொடங்கினான். அதுவும் நீண்டு வளர்ந்து கழுத்து வரை தொங்கியது. குளிர்காலத்தில் சட்டையே இல்லாமல் உலாவுவான். கோடை காலத்தில் ஒன்றுக்கு மேல் ஒன்றாகப் பல சட்டைகளை அணிந்து கொள்வான். காலில் அணிய வேண்டிய உடைகளை உடம்புக்கு அணிந்து கொள்வான். உடம்புக்கு அணியும் உடைகளைக் காலுக்கு அணிந்து கொள்வான். முன்புறம் அணிய வேண்டியதைப் பின்புறமாக அணிந்து கொள்வான். பின்புறம் அணிய வேண்டியதை முன்புறம் அணிந்து கொள்வான். எப்பொழுதும் பின்பக்கமாக நடப்பானே தவிர முன்பக்கமாக நடக்க மாட்டான். இரவு முழுவதும் விழித்து இருப்பான். பகல் முழுவதும் தூங்குவான்.

அவனுக்கு ஒரே ஒரு மகள் இருந்தாள். தன் மகளுக்குத் திருமணம் செய்ய நினைத்தான் அவன். அமைச்சர்கள் ஐந்து பேரையும் அரசவைக்கு வரவழைத்தான்.

இளவரசிக்குத் திருமணம் செய்ய எண்ணி உள்ளேன். மற்ற அரசர்கள் விரும்புவதைப் போல எனக்கு மருமகனாக வீரன் வேண்டாம். அறிவுள்ளவன் வேண்டாம். நல்ல பண்புள்ளவன் வேண்டாம். அழகானவனும் வேண்டாம், என்றான் அரசன். இதைக் கேட்ட அமைச்சர்கள் திகைப்பு அடைந்தனர்.

இளவரசியார்க்கு யார் கணவனாக வர வேண்டும் என்று விரும்புகிறீர்கள்? என்று கேட்டார் ஓர் அமைச்சர்.

சோம்பேறியான ஒருவன் தான் எனக்கு மருமகனாக வர வேண்டும். மிகப் பெரிய சோம்பேறியைத் தேடும் வேலையை உங்களிடம் ஒப்படைக்கப் போகிறேன். அதற்காகத்தான் உங்களை வரவழைத்தேன், என்றான் அரசன்.

நாங்கள் என்ன செய்ய வேண்டும்? அரசே! என்று கேட்டார் இன்னொரு அமைச்சர்.

உங்க ஒவ்வொருவருக்கும் ஓராண்டு தவணை தருகிறேன். நீங்கள் பல நாடுகளுக்கும் சென்று சிறந்த சோம்பேறியைக் கண்டுபிடிக்க வேண்டும். தேவையான பணத்தை கருவூலத்தில் பெற்றுக் கொள்ளுங்கள், என்றான் அரசன். ஐந்து அமைச்சர்களும் அரசனிடம் விடைபெற்றுப் புறப்பட்டார்கள். ஐவரும் வெவ்வேறு திரைகளில் பிரிந்தார்கள்.
ஓராண்டு கழிந்தது. ஐந்து அமைச்சர்களும் நாடு திரும்பினார்கள். அவர்களை வரவேற்றான் அரசன்.

முதலாம் அமைச்சனைப் பார்த்து, உம் அனுபவங்களைச் சொல்லும். எனக்கு மருமகனாகும் சோம்பேறியை எங்கே கண்டுபிடித்தீர்? சொல்லும், என்று ஆர்வத்துடன் கேட்டான் அவன்.

அரசே! நான் பல நாடுகளுக்குச் சென்றேன். எத்தனையோ விந்தையான அனுபவங்கள் எனக்கு ஏற்பட்டன. இருந்தும் சோம்பேறிகளைத் தேடி அலைந்தேன். எத்தனையோ சோம்பேறிகளைச் சந்தித்தேன். யாருமே நம் இளவரசியார்க்குப் பொருத்தமானவராகத் தெரியவில்லை. பெரிய சோம்பேறியைச் சந்திக்கும் பேறு பெற்றேன். என்றான் அமைச்சன். அவன் என்ன செய்தான்? என்று கேட்டான் அரசன்.

அந்தச் சோம்பேறியை வழியில் சந்தித்தேன். அரசே! அவனுடைய ஒரு கால் சேற்றிலும் மற்றொரு கால் சாலையிலும் இருந்தது. அப்படியே நின்று கொண்டிருந்தான். நான் அவனைப் பார்த்து, ஏன் இப்படி நிற்கிறாய்? என்று கேட்டேன். இரண்டு மாதமாக நான் இப்படித்தான் நின்று கொண்டிருக்கிறேன். சேற்றில் உள்ள காலை எடுக்க எனக்குச் சோம்பலாக உள்ளது, என்று பதில் தந்தான் அவன், என்றான் அமைச்சன்.

இளவரசிக்குப் பொருத்தமான பெரிய சோம்பேறி தான் அவன், என்று மகிழ்ச்சியாகச் சொன்னான் அரசன்.

குறுக்கிட்ட இரண்டாம் அமைச்சன், அரசே! நானும் ஒரு சோம்பேறியைப் பார்த்துவிட்டு வந்திருக்கிறேன், என்றான். உன் அனுபவங்களைச் சொல், என்றான் அரசன்.

அரசே! உங்கள் கட்டளையை நிறைவேற்றுவதற்காகப் பல மலைகளையும் ஆறுகளையும் கடந்து சென்றேன். ஓர் ஊரில் மிகப் பெரிய சோம்பேறியைக் கண்டேன். அவனுக்கு மிக நீண்ட தாடி இருந்தது. அந்தத் தாடி ஊர் முழுவதும் பரவிக் கிடந்தது- பார்ப்பதற்கு மேகக் கூட்டம் போல இருந்தது. இரண்டு மீசைகளும் நீண்டு இருந்தன. ஒரு மீசையில் குருவி ஒன்று கூடு கட்டி இருந்தது. இன்னொரு மீசையில் எறும்புப் புற்று வளர்ந்து இருந்தது. நான் அவனைப் பார்த்து, எதற்காக இவ்வளவு நீண்ட தாடியும் மீசையும் வளர்த்து இருக்கிறாய்? என்று கேட்டேன்.


சோம்பேறியான அவன் எனக்கு எந்தப் பதிலும் தரவில்லை. அவன் அருகில் முக சவரம் செய்யும் கத்தி துருப்பிடித்துக் கிடந்தது. அங்கிருந்தவர்கள் அவன் முக சவரம் செய்து முப்பது ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது என்றார்கள். நல்ல சோம்பேறிதான், என்ற அரசன், அவன் தாடி மீசையைச் சொரிந்து கொள்கிறானா அல்லது அதற்கும் சோம்பலா? என்று கேட்டான். அவன் சில சமயங்களில் தாடி மீசையைச் சொரிந்து கொள்கிறான். அது மட்டும் அல்ல. தன் மீசையில் அமர வரும் காக்கைகளை விரட்டுவதற்காக கூழாங்கற்களை அவற்றின் மேல் எறிகிறான், என்றான்.

மூன்றாம் அமைச்சனைப் பார்த்து, நீ பார்த்து வந்த சோம்பேறியைப் பற்றிச் சொல், என்று கேட்டான், அரசன்.

அரசே! நானும் பல நாடுகளுக்குச் சென்றேன், ஓர் ஊரில் சோம்பேறி ஒருவனைக் கண்டேன். உங்களுக்கு மருமகனாக மிகவும் பொருத்தம் உடையவன். சோம்பல் காரணமாக கடந்த இருபது ஆண்டுகளாக அவன் வீட்டை விட்டு வெளியே சென்றது இல்லை. நாற்காலியில் அமர்ந்து இருந்தபடியே எல்லோருக்கும் அவன் அறிவுரை வழங்குவான். நான் சென்றிருந்த சமயம் அவன் வீட்டில் தீப்பிடித்துக் கொண்டது. அவன் உடையிலும் தீப்பிடித்துக் கொண்டது. இருந்த இடத்தைவிட்டு அசையவில்லை அவன். வெளியே இருந்தவர்கள் எல்லோரும் கத்தினார்கள். எந்தப் பயனும் இல்லை. வீட்டிற்குள் நுழைந்த சிலர் அவனை அப்படியே வெளியே தூக்கி வந்து காப்பாற்றினார்கள், என்றான்.

உண்மையிலேயே இவன் பெரிய சோம்பேறிதான், என்ற அரசன் நான்காம் அமைச்சனைப் பார்த்தான்.
அரசே! நான் காடு மலைகளில் அலைந்தேன். முட்புதர்களில் சிக்கி என் உடைகள் கிழிந்து விட்டன. அதுவும் நல்லதற்குத்தான். அதனால்தான் அந்தச் சோம்பேறியைக் காணும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது, என்றான் அவன். அவன் என்ன செய்தான்? என்று பரபரப்புடன் கேட்டான் அரசன். அரசே! அவன் தன் வீட்டுத் தோட்டத்தில் ஒரு மரத்தடியில் பதினைந்து ஆண்டுகளாகப்படுத்திருக்கிறான். தன் வாயிற்கு அருகே காரட் முள்ளங்கி ஏதேனும் முளையாதா என்று காத்துக் கொண்டிருக்கிறான். அவன் நெற்றியில் உள்ள சுருக்கத்தில் இரண்டு முள்ளங்கிச் செடிகள் முளைத்துள்ளன. அதைப் பிடுங்கிப் போடக்கூட அவன் தன் கை விரல்களைப் பயன்படுத்தவில்லை. மரத்திலிருந்து அவன் வாயிற்கு நேராக ஏதேனும் பழங்கள் விழுந்தால் உண்பான். பக்கத்தில் விழுந்தால் அதை எடுத்து உண்ண மாட்டான், என்றான் அவன். அந்த வாழ்க்கை அவனுக்குப் பிடித்து இருக்கிறதா? என்று கேட்டான் அரசன்.

அவனிடம் நீண்ட நேரம் பேசினேன். அவன் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகக் கூறினான். தன் மூக்கிலோ அல்லது வாயிலோ பழ மரம் முளைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். பழத்திற்காக நான் வாயைத் திறந்து கொண்டு படுத்திருக்க வேண்டாமே என்றான் அவன், என்று விளக்கமாகச் சொன்னான், அமைச்சன். நான் கேட்டதிலேயே அற்புதமான சோம்பேறி இவன். என் மகளுக்கு ஏற்றவன், என்ற அரசன் ஐந்தாம் அமைச்சனைப் பார்த்தான்.

உடனே அந்த அமைச்சன், அரசே! நான் பார்த்த சோம்பேறியைப் பற்றிச் சொன்னால் உங்கள் கருத்தை மாற்றிக் கொள்வீர்கள். இவனுடைய சோம்பேறித்தனத்திற்கு மற்ற நால்வரும் கால் தூசி பெற மாட்டார்கள், என்றான். நீ பார்த்த சோம்பேறியைப் பற்றிச் சொல், என்றான் அரசன்.

அரசே! சோம்பேறியைத் தேடும் முயற்சியில் நான் பலமுறை உயிர் பிழைத்தேன். ஒரு நாட்டை அடைந்தேன். உலக மகா சோம்பேறி ஒருவனைக் கண்டேன், என்றான் அவன். ஆர்வத்தை அடக்க முடியாத அரசன், அவன் என்ன செய்தான்? என்று பரபரப்புடன் கேட்டான். சிலர் அவன் உயிரோடு இருப்பதாகச் சொன்னார்கள். சிலர் அவன் இறந்து விட்டதாகச் சொன்னார்கள். சிலர் அவனைத் துறவி என்றார்கள். சிலர் அவனைப் பற்றிக் கருத்து சொல்ல மறுத்தார்கள். நானே சென்று அவனை நேரில் பார்த்தேன். அவனைச் சுற்றிலும் புற்று வளர்ந்து இருந்தது. எழுபது ஆண்டுகளாக அவன் சிறிதுகூட அசையவில்லை. யார் பேச்சையும் கேட்க விரும்பாத அவன் காதுகளில் மெழுகை அடைத்துகூ கொண்டான். பேச வேண்டி வரும் என்பதால் தன் நாக்கை ஒரு பாறாங்கல்லில் கட்டி இருந்தான். எதையும் அவன் சாப்பிடுவது இல்லை. காற்றை மட்டும் சுவாசித்துக் கொண்டு உயிர் வாழ்கிறான். யாராவது உணவைக் கொண்டு வந்தால்கூட அதைக் கையில் வாங்க அவனுக்குச் சோம்பல். பத்தாண்டுகளுக்கு முன் அவன் தன் உதடுகளைச் சிறிது அசைத்தானாம் அதனால்தான் அவன் உயிரோடு இருப்பது மற்றவர்க்குத் தெரிந்ததாம், என்று நடந்ததைச் சொன்னான் அந்த அமைச்சன்.
வியப்பு அடைந்த அரசன், இப்படி ஒரு சோம்பேறியா? அவனே என் மருமகன். அவனுக்கும் இளவரசிக்கும் விரைவில் திருமணத்திற்கு ஏற்பாடு செய்யுங்கள், என்று மகிழ்ச்சியுடன் சொன்னான். ஒரு நல்ல நாளில் அந்தச் சோம்பேறிக்கும் இளவரசிக்கும் திருமணம் நடந்தது.
 
(Thanks: Koodal.com)
.


Saturday, January 5, 2013

இளைஞனின் ரயில் பயணம்

ஒரு நாள் தந்தையும் , அவரின் 24 வயது மகனும் ரயிலில் பிரயாணம் செய்து கொண்டிருந்தனர்.

அந்த இளைஞன் ஜன்னலின் வழியே வெளியே எட்டி பார்த்து, "மேகம் நம் கூடவே வருகிறது", என அவர் தந்தையிடம் கூறினார். அதற்கு தந்தையும், "ஆமா "என்று சொன்னார் .

கொஞ்ச நேரம் கழித்து, " அப்பா மரம்,செடியெல்லாம் நம்மை கடந்து செல்கின்றன !!!" என்று சொன்னார். அதற்கும் தந்தை "ஆமாம்" என்று சொன்னார்.

இதை கவனித்து கொண்டிருந்த எதிரில்  இருந்த தம்பதியினர், " இவரை கொஞ்சம் மருத்துவ மனையில் சென்று காண்பிக்க கூடாதா?" என்று கேட்டனர். அதற்கு அந்த தந்தை ," ஆமாம்! நாங்கள் மருத்தவமனையில் காட்டி விட்டு தான் இப்போது வருகிறோம். அவருக்கு பிறவியில் இருந்து கண் பார்வை கிடையாது அந்த குறைபாடு இப்பொழுது தான் சரி செய்ய பட்டது." என்று சொன்னார்.

எனவே , "ஒவ்வொருவருக்கும் அவரவர் வாழ்கையில் ஒரு விதமான கஷ்டம் இருக்கும். நாம் அதை தெரியாமல் விமர்சிக்க கூடாது!!!"

Thursday, January 3, 2013

கண் தெரியாத பிச்சைக்காரரின் இனிய நாள்!!!

கடை தெரு ஒன்றில் கண் தெரியாத பிச்சைக்காரர் ஒருவர் பிச்சை எடுத்து கொண்டிருந்தார். அவர் அருகில் ஒரு பலகையில் "எனக்கு கண் தெரியாது, உதவி செய்யுங்கள் " என்று எழுதி வைத்திருந்தார்.  இதை பார்த்து அவ்வழியில் செல்வோர் அவருக்கு உதவி செய்தனர்.

அவ்வழியில்  சென்ற ஒரு நபர் அந்த பலகையில்  இருந்த வாசகத்தை அழித்து விட்டு , வேறொரு வாக்கியத்தை அதில் எழுதி விட்டு சென்று விட்டார். அந்த நாள் பிச்சைக்காரருக்கு ஏராளமானோர் உதவி செய்தனர். பிச்சைக்காரருக்கு மிக்க மகிழ்ச்சி. எனவே அதில் என்ன வாக்கியம் இருக்கிறது என தெரிந்து கொள்ள அவ்வழி சென்ற ஒருவரிடம் , "இந்த பலகையில் இருக்கும் வாக்கியத்தை எனக்கு வாசித்து காட்ட முடியுமா?"  என கேட்டார்.

அந்த நபர் வாசித்தார்,  "இந்த நாள் மிகவும் அழகான நாள், ஆனால் என்னால் பார்க்க முடிய வில்லை!!!".

இதில் இருந்து நாம் தெரிந்து கொள்வது என்னவெனில், நம்முடைய கருத்தை வெளிபடுத்தும் விதம் பிறரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இருக்க வேண்டும்.

Tuesday, January 1, 2013

குரங்கும்... ஆமையும் ...

ஒரு காட்டின் வழியே ஆமை ஒன்று உணவு தேடி சென்று கொண்டிருததாம். அப்பொழுது அந்த வழியே வந்த குரங்கு ஒன்று ஆமையிடம், "ஏய் ஆமையே இந்த காட்டுக்குள்ள எங்க போறே" ன்னு கேட்டதாம்.

அதற்க்கு ஆமை, "மூன்று நாட்களா நான் சாப்பிடவே இல்லை உணவு தேடி போகிறேன்னு சொன்னதாம்.
"அப்படியா நானும் சாப்பிட்டு மூன்று நாட்களாச்சு"..ன்னு குரங்கு பதில்  சொன்னதாம்.  அப்பிடியா அப்ப நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து உணவு தேடுவோம்னு ஆமை சொல்லுச்சாம்.

இருவரும் பேசி கொண்டே இரை தேடி சென்றனர். இருவரும் நண்பரகளாகி விட்டனர். 

தூரத்தில் குரங்கு ஒரு வாழை மரத்தை பார்த்தது. அதில் வாழை பழங்கள் பழுத்து தொங்கி கொண்டிருந்தன. இதை ஆமையிடம் காண்பித்தது.  ஆமையின் கண் பார்வைக்கு தூரத்தில் இருக்கும் வாழை மரம் தெரியவில்லை. வாழை மரத்தின் அருகில் சென்று பார்த்தவுடன் ஆமைக்கு ஒரு மகிழ்ச்சி.  ஆனால் என்ன செய்ய....  மரத்தில் ஏற முடியாதே!!!  என ஆமை யோசித்து கொண்டிருந்தது. அதற்க்கு குரங்கு " கவலைபடாதே நான் உனக்கு வாழை  பழத்தை பறித்து கீழே எறிகிறேன். எடுத்து கொள்" ன்னு சொன்னது.


குரங்கு வாழை மரத்தில் ஏறி அனைத்து பழங்களையும் சாப்பிட ஆரம்பித்தது. வாழை பழ தோலை கூட விட்டு வைக்க வில்லை.  கீழே காத்திருக்கும் நண்பனை மறந்துவிட்டு சந்தோசமாக சாப்பிட்டு கொண்டிருந்தது. ஆமை கூப்பிட்டாலும் அதை சட்டை செய்யாமல் இருந்தது.

இந்த செயல் ஆமைக்கு கோபத்தை ஏற்படுத்தியது. இந்த குரங்குக்கு நல்ல பாடம் கற்பிக்க வேண்டுமென எண்ணியது.
வாழை மரத்தின் கீழே உடைந்த கண்ணாடி துகள்களை பரப்பி வைத்து விட்டு ஒரு தேங்காய் மூடியின் அடியில் போய் ஒளிந்து கொண்டு என்ன நடக்கிறது என பார்பதற்க்கு ஆவலாக காத்திருந்தது.

வயிறு முட்ட சாப்பிட்ட குரங்கு மெதுவாக வாழை மரத்தின் கீழே இறங்கியது. கீழே இருந்த கண்ணாடி துகள்கள் குரங்கின் காலை பதம் பார்த்தது. கை,கால்களில் இருந்து இரத்தம்  கொட்ட தொடங்கியது. வலியால் துடித்த குரங்கு,இது ஆமையின் செயல் தான் என்பதை கண்டு பிடித்தது. ஆமையை பலி வாங்க ஆமையை  தேடியது. தேங்காய் மூடியின் அடியில் போய் ஒளிந்து கொண்டு இருந்த ஆமையை கண்டு பிடித்து அதை கொல்லத் துடித்தது.

உயிருக்கு மன்றாடிய ஆமையிடம் , "நீ நெருப்பில் சாகிறாயா என கேட்டது". அதற்க்கு ஆமை நான்  தண்ணிரில் சாகிறேன் என்று சொன்னது.  ஆமை நீரிலும், நிலத்திலும் வாழும் என்பதை மறந்த முட்டாள் குரங்கு ஆமையை ஓடும் ஆற்றில் தூக்கி வீசியது. உயிர் பிழைத்த ஆமை , " இது தான் என் வீடு " என சந்தோசமாக நீந்தி சென்றது.

இதனால் கோபமான குரங்கு ஆற்றில் குதித்து ஆமையை கொல்ல சென்றது.  ஆழமான சுழல் இருக்கும் பகுதியில் நீந்த முடியாமல் சிக்கி மூழ்கி இறந்து போனது. 

"நாம் அனைவருக்கும் நல்லது நினைத்தால் நமக்கும் நல்லது நடக்கும்"

சுறுசுறுப்பு எறும்பும் , சோம்பேறி வெட்டுக்கிளியும்....


வெட்டுக்கிளி ஒன்று சந்தோசமாக பாட்டு பாடி கொண்டிருந்தது. அப்பொழுது அந்த வழியில் ஒரு எறும்பு ஒன்று தன்னை விட உயரமான,கனமான உணவை இழுத்து கொண்டு போனதை பார்த்த வெட்டுக்கிளி, "ஏய் எறும்பே எங்கே போய் கொண்டிருக்கிறாய்.. என்னை பார்த்து ஒரு வார்த்தை பேசாமல் போகிறாயே" என்று கேட்டது.


"எனக்கு தேவையான உணவை இப்பொழுது சேர்த்து வைக்கிறேன் அது எனக்கு பிற்காலத்தில் உதவியாக இருக்கும். நீயும் உனது உணவை இப்பொழுதே சேர்த்து வச்சுக்கோ.. அது உனக்கு வெயில் காலத்தில் உணவு கிடைக்காத சமயத்தில் பேருதவியாக இருக்கும் "  என எறும்பு கூறியது.

இதை கேட்ட வெட்டுக்கிளி நக்கலாக சிரித்து விட்டு, " இப்பொழுது எனக்கு தேவையான எல்லா உணவும் கிடைக்கிறேதே, பின் நான் ஏன் பிற்காலத்தை பற்றி இப்பொழுதே கவலை பட வேண்டும்" என கேலியாக பேசிவிட்டு தனது பாட்டை தொடர்ந்து பாடி கொண்டிருந்தது.



வெயில் காலமும் வந்தது.. கூடவே உணவு பஞ்சமும் வந்தது... வெட்டிக்கிளி உணவு தேடி அலையும் சமயத்தில் எறும்பை சந்திக்க நேர்ந்தது. வெட்டிக்கிளிக்கு ஒரே ஆச்சார்யும், "என்னடா யாருக்கும் உணவு கிடைக்கல. உனக்கு மட்டும் எப்படி கிடைத்து " என்று எறும்பை பார்த்து கேட்டது. 

அதற்கு எறும்பு, "உணவு கிடைக்கும் சமயத்தில் நான் சேர்த்து வைத்தேன் அது எனக்கு இப்பொழுது உதவியாக இருக்கிறது" என பதில் சொல்லி விட்டு, பசியால் வாடும் வெட்டிக்கிளிக்கு  கொஞ்சம் உணவு கொடுத்து அதன் பசியை போக்கியது.பசி போனவுடன் வெட்டிக்கிளிக்கு   ஒரே மகிழ்ச்சி..

வெட்டுக்கிளி தன்னுடைய தவறை எண்ணி வருந்தியது. இனி மேல் உணவு கிடைக்கும் சமயத்தில் கால விரயம் செய்யாமல் சுறுசுறுப்புடன் உணவை சேர்க்க வேண்டும் என்று எண்ணி கொண்டது.

பூனையை ஏன் நாய் துரத்துக்கிறது தெரியுமா?

ஒரு ஊரில் நாயும், பூனையும் திருமணம் செய்து கொண்டு கணவன் மனைவியாக வாழ்ந்து கொண்டிருதார்கள். கணவர் நாயானது கடுமையான உழைப்பாளி.  அதிகாலை எழுந்த உடன் வேலைக்கு சென்று விடும். வேலை முடிய இரவாகி விடும். வேலையை முடித்து விட்டு வேலைக்கான கூலியை வைத்து வீட்டிற்கு தேவையான பொருள்களை வாங்கி கொண்டு வீட்டிற்கு வரும்.  வீட்டிற்கு வரும் பொழுது நாயுக்கு பசி வயிறை கிள்ளும்.

பசிக்கும் பொழுது உணவு இருந்தால் யாராவது வேண்டாமென சொல்வார்களா என்ன?  ஆனால் நாய் வீட்டிற்க்கு வந்தால் உணவு தயராக இருக்காது.

நாய்,பூனையிடம் ஏன் உணவு தயார் செய்ய வில்லை என கேட்டால "எனக்கு உடம்பே சரி இல்லை" ன்னு சொல்லும்.  நாயும் வேற வழி இல்லாமல் பூனைக்கும் அது குட்டிகளுக்கும் சேர்த்து சமைக்கும். சாப்பிட்டு உறங்க செல்ல நடுநிசி ஆகிவிடும். இந்த வழக்கம் ஒரு நாள்,இரண்டு நாள் இல்லாமல் வார, மாத கணக்கில் தொடர்ந்தது. இதனால் நாயின் உடம்பில் வலு குறைய ஆரம்பித்தது. சரியான உறக்கம் இல்லையெனில் கஷ்டம் தானே?

நாய்,பூனையை டாக்டரிடம் அழைத்து செல்லலாம் என எண்ணி பூனையிடம், " உன்னுடைய உடம்பை டாக்டரிடம் சென்று காண்பிப்போம்" என அழைத்தது.அதற்க்கு பூனை வர மறுத்துவிட்டு, " எல்லாம் கொஞ்ச நாளான சரியாய் போகும்ன்னு" சொல்லி போக்கு காட்டியது.

இந்த விஷயம் நாயிக்கு சந்தேகத்தை கிளப்பியது. "உண்மையிலயே பூனைக்கு உடம்பு சரி இல்லையா? இல்ல நம்ம கிட்ட பொய் சொல்லுதானு கண்டுபிடிக்க ஆசை பட்டது". ஒரு நாள் காலை வேலைக்கு செல்வது போல கிளம்பி ஒரு மறைவில் ஒளிந்து கொண்டு பூனை என்ன செய்கிறது என கண்காணிக்க ஆரம்பித்தது.

பூனையானது கணவர் வேலைக்கு சென்று விட்டார் என எண்ணி தனது குட்டிக்குளுடன் சந்தோசமாக விளையாட ஆரம்பித்தது. விளையாண்டு முடித்தவுடன் நன்கு படுத்து உறங்கியது. தனது நாளை சோம்பேறியாகவே கழித்தது. இதை எல்லாம் மறைந்திருந்து கவனித்துக்கொண்டிருத்த நாய், மிகவும் கோபத்துடன் பூனையின் எதிரே சென்று நின்றது. இதை பார்த்த பூனை சடாலென ஒரு கூலாங்க் கல்லை எடுத்து வாயினுள் வைத்துக் கொண்டு எனக்கு  "காலையில் இருந்து ஓரே பல் வலி"என பொய் சொல்லியது. எல்லாம் மறைந்திருந்து கவனித்துக்கொண்டிருத்த நாயிக்கு பொய் என தெரியாத என்ன? 

நாய் மிகவும் கோபத்துடன் பூனையை விரட்ட ஆரம்பித்தது , அது இன்றும் நிற்காமல் தொடர்கிறது என ஒரு அமெரிக்க் கதை ஒன்று சொல்கிறது.